கண்ணன் கள்வன்
கடல் கடைந்தானை
எண்ணின் எளிதில்
வினை ஒழிப்போமே
ஒழிப்போம் தீவினை
பழிப்போம் தீசெயல்
அழிப்போம் அஞ்ஞானம்
அவன் அருளாலே
அருள்வோன் அருளன்
அளிப்போன் அளிப்பு
அமுதன் இனியன்
தாள் பணிவோமே
பணிவோம் அவன்தாள்
இணைவோம் அடியார்
கடப்போம் பிறவி
அடைவோம் அவனடி
அவனடி அதையே
அனுதினம் தொழுதால்
அலரும் ஞானம்
மனதில் மோனம்
மோனன் மோகனன்
கருட வாகனன்
நாமம் கூறிட
நீங்கும் துயரே
துயரறு சுடரடி
தொழுதிட இடரது
நொடிதினில் வழிவிடும்
தொழுது காண்மினே
காண்மின் கண்ணன்கண்
காண்மின் கண்ணன்தாள்
காண்மின் கண்ணனை
கண்டு உய்மினே
உய்மின் உய்ந்திட
உத்தமன் திருவடி
பற்றுக பற்றி
பற்றிலர் ஆவீரே
ஆவீர் பக்தர்கள்
ஆவீர் ஞானியர்
அடைவீர் வைகுந்தம்
அவன் அருளாலே 10
அருளால் தொழுதேன்
அருங்குண ராமனை
அடிபற்றிக் கிடந்தேன்
அதனால் மகிழ்ந்தேன்
மகிழ்ந்தேன் மனத்துள்
மலர்முக ராமன்
முகமது கண்டு
தாய்க்கண்ட சேயாய்
சேயாய் தவழ்ந்தான்
கோசலை மடியினில்
தாயாய்க் காத்தான்
கோசலை மக்களை
மக்களை மாக்களை
செடிகளை கொடிகளை
நான்முகனார் பெற்ற
நாட்டுள்ளே சேர்த்தான்
சேர்த்தான் புண்ணியம்
காத்தான் சத்தியம்
கோத்தான் ஒருவில்லை
பத்துத் தலைக்கொய்ய
பத்துத் தலைக்கொய்ய
பாலம் அமைத்தான்
அமைத்தான் அதன்முன்னே
வானமும் வையமும்
வையமும் ஆனான்
வையமும் அளந்தான்
வையமும் ஆண்டான்
அரசன் ராமனே
ராமனே ஆதி
ராமனே அந்தம்
ராமனே பந்தம்
ராமனே சொந்தம்
சொந்தம் ராமனே
சொர்க்கம் ராமனே
சொர்க்கம் சென்றிட
பாதையும் ராமனே
ராமனின் காதை
வாழ்வின் பாதை
எனக்கொண்டு வாழ்வோர்
எதிலும் வெல்வரே 20
வெல்வர் எதிலும்
செல்வரும் ஆவர்
வல்வினை தொலைப்பர்
ராமனை தொழுது
தொழுது கிருட்ணனை
மனத்துள்ளே வைத்திட
அழுதிட காரணம்
இலையென்று ஆகுமே
ஆகும் எளிதில்
ஆனந்தம் அடைதல்
மச்ச மூர்த்தியை
மனத்துள்ளே வைத்தால்
வைத்தால் வாமனனை
சொல்லிலும் நினைவிலும்
வானம் அளக்கும்
வைத்தவர் புகழே
புகழ் அனைத்துக்கும்
உரியவன் அவனே
கூர்மமாய் கிடந்து
மலை சுமந்தானே
சுமந்தான் பூமி
கொம்பின் நுனியில்
கேழலாய் வந்த
நாரணன் தானே
தானே அனைத்தும்
ஆனவன் அன்பால்
சிங்கமாய் வெகுண்டு
ஊன் கிழித்தானே
கிழித்தான் உடலை
அணிந்தான் குடலை
கோடறி ராமனாய்
பழித் தீர்த்தானே
தீர்த்தான் தென்னிலங்கை
தீர்ப்பான் பொய்விலங்கை
சேர்ப்பான் தன்னிடத்தே
பலராம நாதனே
நாதன் அனைத்துக்கும்
நாதன் அனைவர்க்கும்
அன்புக்கு ஆட்பட்டு
ஆளும் விட்ணுவே 30
விட்ணுவும் முன்னம்
நரசிம்மம் ஆகி
பக்தனைக் காத்தான்
நம்மைக் காப்பான்
காப்பான் நம்மை
அம்மான் என்றிட
பயங்கள் களைவான்
நரசிம்ம தேவனே
நரசிம்ம தேவனே
தாயும் தந்தையும்
நரசிம்ம தேவனே
ஊனும் உயிரும்
உயிரும் தந்தான்
உயர்வும் தருவான்
பொன்னனைத் தீர்த்த
பொன் முடியானே
முடியாது என்பன
முடித்துத் தருவான்
முடிசூட்டி பாலனை
அரசாள வைத்தானே
வைத்தான் மடியினில்
கிழித்தான் கனகனை
பிரகலாதன் நான்முகன்
சொற்கள் மெய்ப்பட
மெய்ப்பட ஞானத்தை
பேசிய பிள்ளையை
இம்சித்த அப்பனை
கொன் றொழித்தானே
ஒழித்தான் கோபம்
அடைந்தான் சாந்தம்
அணைத்தான் பாலனை
அணைப்பான் நம்மை
அணைப்பான் நம்மை
அப்பா என்றிட
நலங்கள் தருவான்
நரசிங்கா என்றிட
நரசிங்கா என்றிட
அடங்குவர் எதிரிகள்
அடங்கும் ஐம்புலன்
அடைவோம் மேன்மை 40
அடைவோம் ஞானம்
பரிமுகன் பாதத்தை
தொழுதிட நாளும்
நாளும் பரிமுகன்
நாமம் ஓதிட
படிகமாய் தெளியும்
மனமும் அறிவும்
அறிவும் அளிப்பான்
ஆளுமை அளிப்பான்
அஞ்ஞானம் களைவான்
பரிமுக தேவன்
பரிமுக தேவன்
நாமகள் நாதன்
திருமகள் கேள்வன்
பாதம் தொழுவோம்
தொழுவோம் திருப்பாதம்
சொல்வோம் திருநாமம்
அயக்ரீவா என்போம்
அறிஞராய் ஆகிட
ஆகிட புலவராய்
ஆகிட கலைஞராய்
அயக்ரீவ தேவன்
தாள் பணிவோமே
பணிவோம் பரிமுகன்
பாதத்தை தேடி
புகழ்வோம் பரிமுகன்
அருங்குணம் நாளும்
நாளும் பரிமுகன்
நாமத்தை சொல்லிட
ஞானம் அதுநம்
கைநெல்லி யாமே
ஆமென்று சொல்வர்
ஆன்றோர் சான்றோர்
அயக்ரீவர் பக்தர்
பேசிடும் போதில்
போதில் பிடியுங்கள்
அயக்ரீவன் பாதம்
அஞ்ஞானம் தருகின்ற
துயரதை துடைத்திட
துடைத்திட அஞ்ஞானம்
அடைந்திட நல்ஞானம்
பரிமுகன் பாதத்தின்
புகழ் சொல்வோமே 51
சொல்வோம் சீரங்கன்
சீர்புகழ் அதனை
பேரழ கதனை
அருந் தமிழாலே
தமிழால் தொழுதார்
ஆழ்வார் அரங்கனை
அடைந்தாள் ஆண்டாளும்
சீரங்கன் பாதம்
பாதம் தொழுவார்
நாமம் சொல்வார்
சுகமாய் வாழ்வார்
சீரங்கன் அருளால்
அருளால் ஆள்வோன்
அரங்கத்து அம்மான்
அழகினைக் காண்மின்
உள்ளம் மகிழவே
மகிழவே கிடந்தான்
காவிரிக் கரையில்
மகிழ்ந்தே கிடக்கிறான்
என்நெஞ்சில் அரங்கன்
அரங்கன் கிடக்கிறான்
காவிரிக் கரையினில்
பாற்கடல் மேலும்
பக்தர்கள் உள்ளும்
உள்ளும் புறமும்
அவனாகி நின்றான்
ராமனாய்த் தன்னை
தானே தொழுதான்
தொழுதான் ராமனாய்
மகிழ்ந்தான் ரங்கனாய்
பிறந்தான் கண்ணனாய்
வையம் வாழவே
வாழவே காண்பீர்
சீரங்கன் அழகை
வாழவே வைப்பான்
சீரங்க நாதன்
சீரங்க நாதன்
புகழை எழிலை
சிந்தித்து மகிழ்வோர்
சுகம் பெறுவாரே 61
பெறுவார் பெருஞ்செல்வம்
அறுவார் இருவினைகள்
திருவேங் கடத்தான்
தாள் பிடித்தாரே
தாள் பிடித்தாரை
தாழ்ச்சித் உறாமல்
காப்பான் உய்விப்பான்
வேங்கடம் நின்றானே
நின்றான் மலைமேல்
கிடந்தான் அலைமேல்
இருந்தான் என்னிதயத்தில்
வேங்கட நாதனே
நாதன் வேங்கடன்
நாயகன் வேங்கடன்
அலமேலு மங்கைக்கும்
அமரர்க்கும் யாவர்க்கும்
யாவர்க்கும் நன்னன்
பக்தர்க்கு அன்னை
திருவேங்க டேசன்
சீசீனி வாசன்
சீசீனி வாசன்
மாதுறை மார்பன்
மகிழ்ந் தருள்வானே
வேங்கடா என்றிட
வேங்கடா என்றிட
வேங்கடம் சென்றிட
துயரது விலகிடும்
ஒளிகண்ட இருளென
இருளென வண்ணன்
இதயநல் வேங்கடன்
அருளென பணிந்தால்
அருள்வான் அனைத்தும்
அனைத்தும் ஆனான்
அனைவர்க்கும் ஆனான்
ஆனான் ஆக்கினான்
அண்டத்தை வேங்கடன்
வேங்கடன் அருள்வான்
வேண்டிய எல்லாம்
வேங்கடன் தன்னொடும்
தந் தருள்வானே 71
அருள்வான் தந்து
கீதையின் ஞானம்
மீசை முறுக்கிய
அல்லிக்கேணி நாதன்
நாதன் பார்த்தனுக்கு
என்றாலும் அன்பால்
செழுத்தினான் தேரை
பார்த்த சாரதியாய்
சாரதியாய் யுத்தத்தில்
புகும்முன் பார்த்தனுக்கு
கீதைத் தந்தானை
அல்லிக்கேணி காண்மினே
காண்மின் கண்ணனை
அல்லிக்கேணி சென்று
அழைக்காமல் அன்புடன்
உடன் வருவானே
வருவான் நம்முடனே
செழுத்துவான் நம்வாழ்வை
நம்வாழ்வை நல்வாழ்வாய்
ஆக்காமல் ஓயான்
ஓயான் ஒருநாளும்
நாமோயும் போதிலும்
அல்லிக்கேணி நின்ற
வேங்கட கிருட்ணனே
கிருட்ணன் சொன்ன
கீதை விளங்கும்
அல்லிக்கேணி நின்றோனின்
அடி பணிவோர்க்கே
அடி பணிவோர்க்கே
அல்லிக்கேணி தேவன்
அளிப்பான் ஞானம்
அளிப்பான் உயர்விடம்
உயர்விடம் உள்ள
பானையை இறக்குவான்
தாழ்ந்துள்ள பக்தரின்
வாழ்வை உயர்த்துவான்
உயர்த்துவான் நம்மை
பார்த்தனின் சாரதி
சங்கும் சாட்டையும்
கைக் கொண்டானே 81
கொண்டான் பெருங்கருணை
கொண்டான் பலநாமம்
உண்டான் உமிழ்ந்தான்
அண்டத்தை விட்ணுவே
விட்ணுவும் அவனே
அரனயன் அவனே
அமரர்க் கோனும்
அமரரும் அரியே
அரியே அன்பு
அறிவு அழகு
நற்குணம் அனைத்தும்
நற்குண ராமனே
ராமனே தெய்வம்
பிரம்மம் மாயை
சூரியன் சந்திரன்
ஆனவன் மாதவன்
மாதவன் ஆனான்
வானமும் வையமும்
நீரும் நெருப்பும்
காற்றும் கேசவன்
கேசவன் ஆகிறான்
மரத்துள் அரசு
வனத்தின் அரசன்
சிங்கம் நரசிங்கன்
நரசிங்கன் ஆகிறான்
நிலத்தின் ஐங்குணம்
வெளியின் ஒருகுணம்
ஆகிறான் பரிமுகன்
பரிமுகன் ஆதியில்
மீட்ட வேதத்தை
சுருக்கியே உரைத்தான்
கீதையாய் கிருட்ணன்
கிருட்ணன் ராதையின்
மனங்கவர்ந் தானெனின்
கவர்ந்தான் மூவுலகு
அளந்தே வாமனன்
வாமனன் வானத்தை
அளந்திட வளர்ந்தான்
பெற்றான் புதுநாமம்
அதுவே விக்ரமன் 91
விக்ரமன் உயர்த்திய
திருப்பாதம் தொழுதான்
நான்முகன் நீரால்
நெகிழ்ந்தான் நாரணன்
நாரணன் நாமம்
கூறிட அடங்கும்
பசிபிணி மூப்பு
அருள்வான் கோவிந்தன்
கோவிந்தன் நாமம்
பாவம் ஒழிக்கும்
கோவிந்தா என்றிட
அருள்வான் வேங்கடன்
வேங்கடன் மார்பு
திருவுறை மார்பு
கருணைக் கடல்நெஞ்சன்
தாமரைக் கண்ணன்
கண்ணன் வருவான்
கண்ணா என்றிட
தன்னைத் தருவான்
சேயாய் சீதரன்
சீதரன் திருவடி
பற்று வோர்கள்
பயமற்று வாழ்வர்
காப்பான் சீரங்கன்
சீரங்கன் சிலையை
வீடணன் விரும்ப
மகிழ்ந்தே அளித்தான்
வள்ளல் சீதாபதி
சீதா பதியின்
புகழை சொல்வோர்
உணர்வோர் உள்ளே
வளர்வான் ராதாபதி
ராதாபதி அன்று
கூறிய கீதையை
எவர்க்கும் புரிந்திட
வைப்பான் அயக்ரீவன் 100
அயக்ரீவன் அருளால்
சீராமபக்தன் சீகிருட்ணசீடன்
ரமேஷ் இயற்றிய
அந்தாதி நூறு
நூறும் தினம்சொல்வோர்
மனனம் செய்வோர்
உட்பொருள் உணர்வோர்
உயர்வற உயர்வரே
0 comments:
Post a Comment