
தோழி ஈஸ்வரி முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், "ஒண்ணு கேட்குறேன் தப்பா நினைக்காதிங்க ரமேஷ்,
ராமன் கர்பவதியான சீதையை காட்டில் விட சொல்லும் இடத்தில் உங்கள் மனதில் என்ன பட்டது?
என்னால் எவ்வளவு சரியான காரணங்கள் சொன்னாலும் இதை மட்டும் ஏற்றுகொள்ளவே முடியலை" என்று கேட்டிருந்தார்.
இது ராமாயணத்தை படிக்கும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் ஏற்படும் உறுத்தல் தான். எனக்கும் அது ஏற்பட்டது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நான் முதலில் நாத்திகனாக இருந்தவன். பின் அருவ வழிபாட்டிற்கு மாறினேன். கண்ணன் தந்த கீதையில் இருக்கும் பல கருத்துக்கள் எனக்கு உதவியதால் கிருஷ்ண பக்தனானேன். அதன் பிறகு கடந்த மூன்றாண்டுகளாக ராமரையே அதிகமாக வழிபட்டு வருகிறேன்.
நான் ராமபக்தியை சுவைக்க துவங்கிய புதிது. ராமாயணம் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அப்பொழுது எனக்கு 'ஆர்ஷிய சத்தார்' என்கிற இஸ்லாமிய பெண்மணி ஆங்கிலத்தில் எழுதிய ராமாயணம் படிக்கக் கிடைத்தது.
மிகவும் ரசித்து படித்துக் கொண்டே வந்தேன். அன்னை சீதையை தீக் குளிக்கும் காட்சி வந்தது. அப்பொழுது என் மனதில் எந்த உறுத்தலும் ஏற்படவில்லை. அதற்கு மூன்று காரணங்கள்.
முதல் காரணம். என் குணமும் அது தான். எனக்கு மனதில் ஒரு உறுத்தல் இருந்தால் அதை நான் வெளிப்படையாக கேட்டுவிடுவேன். எனக்கு மனதில் சந்தேகத்தை ஒளித்து வைத்துக் கொண்டு அன்பாக இருப்பது போல நடிப்பது ஒவ்வாது. அதனால் அவர் தன் சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டதில் தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
இரண்டாம் காரணம். ராமர் ஏகபத்தினி விரதன். அவர், தன் மனைவி ஒழுக்கத்தில் தனக்கு இணையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.
மூன்றாம் காரணம். ராமருக்கு சீதையை நன்றாக தெரியும். அவருக்கு அன்னை சீதை தன் மீது கொண்டுள்ள நேசம் தெரியும். சீதையின் கற்பு நெறி நன்றாக தெரியும். ஆனால் இவ்வுலகம் அப்படிப்பட்டதல்ல. அது யாரைப் பற்றியும் எதுவும் பேசும். அப்படியிருக்கும் பொழுது தன் மனைவியின் மேன்மையை பிறருக்கு எடுத்துக் காட்டுவது அவர் கடமையாகிறது. சீதையிடம் ராமர், "எனக்கு உன்னைப் பற்றி நன்றாக தெரியும். ஆனால் உலகம் உன்னைப் பற்றி தவறாக நினைக்க கூடாது. ஒரு முறை உன் கற்பின் வலிமையை காட்டுவதற்காக நீ தீக் குளிக்க வேண்டுமென்று" சொன்னால். சீதைக்கு தீக் குளிக்கும் வைராக்கியம் ஏற்படாது. ஏனென்றால் சீதைக்கு ராமர் தான் உலகம். சீதை ஏன் மற்றவர்களைப் பற்றி கவலைப் பட போகிறார்?
ராமர் சீதையிடம் அந்த இடத்தில் காட்டிய கோபம் உண்மையானதாக இருக்கலாம், பொய்யானதாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் அது நியாயமானது தான் என்று எனக்குப் பட்டது.
கதையை தொடர்ந்து படித்து வரும் பொழுது ராமர் தன் தூதுவர்களிடம் நாட்டின் நிலைப் பற்றி விசாரிக்கும் காட்சி வருகிறது. அப்பொழுது பத்ரன் என்கிற ஒரு ஒற்றன் சொல்கிறான், "நான் மக்கள் பேசுவதை ஒளிவு மறைவின்றி சொல்கிறேன். உங்கள் ஆட்சியில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உங்கள் பராக்ரமங்களை வியக்கிறார்கள். நீங்கள் கடலைக் கடக்க பாலம் அமைத்தது பற்றி அதிசயப்படுகிறார்கள். ராவணனையும் அவன் படைகளையும் அழித்தது குறித்து பிரமிப்போடு பேசிக்கொள்கிறார்கள். ராமர் கசப்பான பல நினைவுகளை கூட மறந்து விட்டு சீதையோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார். ராவணனால் கொண்டு செல்லப் பட்டது தெரிந்தும் அவரால் எப்படி சீதையொடு மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என்கிறார்கள். நமக்கு அந்நிலை ஏற்பட்டால் நாமும் அதையே செய்ய வேண்டியிருக்கும். அரசன் எவ்வழியோ நாமும் அவ்வழியே" என்கிறார்கள்."
இதைக் கேட்டதும் ராமர் மனம் உடைந்து போகிறார். தன் மூன்று தம்பிகளை மட்டும் அழைக்கிறார். அவர்களிடம்," நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். நீங்கள் மூவரும் அதை மறுக்காமல் ஏற்க வேண்டும்" என சொல்கிறார். அவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். அப்பொழுது லக்ஷ்மணரிடம் சீதையை அழைத்துக் கொண்டு போய் காட்டில் விட்டு விடும் படி சொல்கிறார். முதலில் மூவரும் அதைக் கேட்டு அதிர்ச்சியாகி அது பற்றி விவாதிக்க முயல்கிறார்கள். அவர் அவர்களை தடுத்து விடுகிறார்.
லக்ஷ்மணர் மறுநாள் அன்னையை அழைத்துக் கொண்டு காட்டிற்கு செல்கிறார். லக்ஷ்மணர் சோகம் தாங்காமல் ரகசியமாக அழுத படி ஒன்றும் பேசாமல் தேரை ஓட்டிச் செல்கிறார். வழி நெடிகிலும் தன்னை காட்டில் விடப் போகிறார்கள் என்பதே தெரியாமல் அனனை வெகுளியாக ஏதேதோ பேசி வருகிறார்.
எனக்கு இக்காட்சியைப் படித்த பொழுது இதயம் கனத்துப் போய் இருந்தது.
காட்டிற்கு சென்றவுடன் லக்ஷ்மணர் அன்னையின் காலில் விழுந்தபடி கதறி அழுகிறார். ராமரின் முடிவைப் பற்றி அன்னையிடம் தெரிவித்து தன்னால் தன் அண்ணனின் வார்த்தைகளை எதிர்க்க முடியவில்லை எனக் கூறி மன்னிப்புக் கேட்கிறார். அன்னை அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அன்னையை அழுதபடி கங்கைக் கரையில் விட்டு விட்டு லக்ஷ்மணர் தேரில் ஏறி திரும்பி விடுகிறார்.
எனக்கு இக்காட்சியைப் படித்த பொழுது அழுகையும் கோபமும் மாறி மாறி வந்தது. கோபத்தின் உச்சத்தில் ராமாயணத்தை அப்படியே ராமர் படத்தின் மீது விட்டெறிந்தேன். எழுந்து வெளியே சென்று விட்டேன்.
என்னால் இந்தப் பைத்தியக்காரத் தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அது தான் ஒரு முறை தன்னை நிரூபித்துக் காட்டினாளே மீண்டும் மீண்டும் இது என்ன பைத்தியக்காரத்தனம் எனக் கடுமையான கோபம் போகவே யில்லை
நான் எல்லா தெய்வங்களையும் அலசி ஆராய்ந்து தான் ராமரைத் தேர்ந்தெடுத்திருந்தேன். கிருஷ்ணரை விடவும், நரசிம்மரை விடவும், சிவ பெருமானை விடவும் எனக்கு ராமர் மீது தான் பிடிப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அவர்களெல்லாம் ஆற்றல்களாலேயே பெரும்பாலும் தங்கள் மேன்மையை நிரூபித்து இருந்தார்கள். ராமரோ எந்த ஒரு இடத்திலும் தன் ஆற்றல்களால் தன் மேன்மையை நிரூபிக்கவில்லை. கடவுள்கள் ஆற்றலை பயன்படுத்தி தங்கள் மேன்மையை நிரூபிக்கும் காட்சிகளை நான் பெரிதாக போற்றுவதில்லை. எனக்கு அவை பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை. கிருஷ்ணர் சுண்டு விரலால் மலையைத் தூக்குவது எனக்கு பந்தா செய்யும் வேலையாகத் தான் தோன்றியது. சிவபெருமான் நக்கீரரை சுட்டெறித்தது அதிகார துஷ்பிரயோகமாகவே எனக்கு பட்டது. ஆனால் ராமரை நினைத்தாலே காலில் விழ வேண்டும் என்று தோன்றியது. நான் இப்படியெல்லாம் வியந்து வியந்து போற்றிய ராமர் இப்படி ஈவு இரக்கமில்லாமல் நடந்து கொண்டிருப்பார் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
நான் எப்பொழுது அறையை விட்டு வெளியே சென்றாலும் ராமர் படத்தை பார்த்து விட்டு செல்வது தான் வழக்கம். அதே போல திரும்ப உள் நுழையும் பொழுதும் ராமர் படத்தை பார்த்து விட்டுத் தான் உள் நுழைவேன். அது மட்டுமில்லாமல் ராமர் படத்தை என் எல்லா எண்ணங்களயும் பகிர்ந்து கொள்ளும் விதமாக அவ்வப்பொழுது பார்த்துக் கொள்வேன். ராம நாமம் இடையறாது உள்ளே ஓடிக் கொண்டே இருக்கும்.
ராமரைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தேன். ராம நாமம் ஜபிப்பதையும் நிறுத்தினேன். மனசுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ரொம்ப நாட்கள் கழித்து என் அகம்பாவத்தை ஒருவர் முன் பலியிட முடியும் என நினைத்திருந்தேன். ராம நாமம் ஜபிப்பதில் கிடைக்கும் நிம்மதி போதும், பணம் புகழ் கூட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால் கடைசியில் அவரும் இப்படி இதயமற்ற ஒரு செயலை செய்திருக்கிறார்.
ஒரு நாள் கழித்து மிகுதியையும் படித்தேன். ராமர் அஸ்வமேத யாகம் நடத்தும் பொழுது அன்னை மீண்டும் ராமரை சந்திப்பார். அப்பொழுது வால்மீகி ராமரிடம் அன்னையை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வார். அப்பொழுது மீண்டும் அன்னை தன்னை நீரூபிக்க வேண்டும் என்று ராமர் கூறுவார். அன்னை அப்படியே பூமி பிளக்க உள்ளே சென்று மறைந்து விடுவார். எனக்கு அது கொஞ்சம் திருப்தியாக இருந்தது. நான் ராமரைப் பார்த்து, "நீங்க நினைச்சா தீக்குளிக்க சொல்வீங்க. அவங்களுக்கு வேற வேலையில்லையா?" என்றேன். அப்பொழுது ராமரின் அந்த கருணை விழிகள் என் உள்ளத்தில் தைத்தது. இந்த ராமரா இப்படிச் செய்தார் என்று தோன்றியது.
ஏற்கனவே ஒருமுறை ராமர் இவ்வுலகில் வாழ்ந்த பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே என் கனவில் பார்த்திருக்கிறேன். (அது பற்றி இத்தளத்தின் 50வது பதிவாக எழுதுவேன்.) அந்தக் கனவு என் நினைவில் வந்தது. அந்த ராமரா இப்படி செய்தார் என்று தோன்றியது?
மீண்டும் ஒரு முறை ராமாயணம் படிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் படித்தேன். இந்த முறை ராமரே என் இதயத்தில் இருந்து தன்னிலை விளக்கம் அளிப்பது போல இருந்தது. ஐம்பூதங்களிலும் அசுத்தப் படுத்த முடியாத ஆகாயம் என் ராமர் என்பது அப்பொழுது எனக்கு விளங்கியது. எந்த சம்பவம் ராமர் மீது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியதோ, அதே சம்பவம் அவரை நான் மேலும் மேலும் போற்றி புகழவும் கொண்டாடவும் காரணமாக அமைந்து விட்டது. அது வரை ராமரைப் பற்றி புகழ்ந்தது கடலலைகளை மட்டுமே பார்த்துவிட்டு கடலைப் புகழ்ந்ததுப் போல் தான் என்பது அப்பொழுது புரிந்தது.
ராமர் அன்னை சீதையை வனத்திற்கு அனுப்பிய செயல் கல் மனம் கொண்டு செய்த செயலாக தோன்றலாம். ஆனால் அந்தக் கல்லுக்குள் கசிந்த ஈரத்தை நாம் கவனிப்பதில்லை.
ராமர் இன்றைய ஆட்சியாளர்கள் போல ஆட்சி நடத்தவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் எதை செய்கிறார்களோ இல்லையோ வாய் கிழிய நன்றாக பேசுகிறார்கள். எல்லா தவறுகளையும் செய்துவிட்டு தவறே செய்யவில்லையென பேசுகிறார்கள். ராமர் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் செயல் வீரராக இருந்தார். தன்னிடம் உண்மையிலேயே எந்த தவறும் இல்லாதவாறு நடந்து கொண்டார். அதற்குக் காரணம் மக்கள் தன்னை நல்ல முன் உதாரணமாக கொண்டு வாழ வேண்டும் என்பது தான். அது ஒரு அரசனின் கடமை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
இப்பொழுது ராமர் சீதையிடம் குறையிருந்தும் ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று மக்கள் நினைத்துவிட்டார்கள். அப்படி மக்கள் நினைத்தால் மக்களிடம் குற்றங்களை சகித்துக் கொள்ளும் மன நிலை ஏற்படும். இதை ராமர் விரும்பவில்லை. அன்னையிடம் குறையில்லை என்பதையும் ராமரால் மக்களிடம் நிரூபிக்க முடியவில்லை. காரணம் அக்னிப் பரீக்ஷை இலங்கையில் நடந்திருந்தது. அதுப் பற்றி இங்கு சொன்னால் சிலர் நம்பாமலும் போகலாம். அதனால் அவருக்கு இருந்த ஓரே வழி அன்னையை துறப்பது தான். அப்படி அன்னையை அவர் துறந்து விட்டால் ராமர் குறையோடு அன்னையை ஏற்றார் என்பது பொய்யாகி விடும். குறையொடு அன்னையை ராமர் ஏற்றார் என்பது பொய்யாகிவிட்டால் மக்களும் குறைகளை பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் வந்துவிடும். குற்றம் குறைகளை சகித்துக் கொள்ளாத ஒரு சமுதாயத்தில் தான் ராம ராஜ்யம் மலர முடியும். ராம ராஜ்யம் என்பது பூமியை சொர்க்கத்துக்கு இணையாக உயர்த்தும் முயற்சி. அந்த முயற்சிக்கு ராமர் கொடுத்த விலை, தன் உயிரான மனைவியை காட்டுக்கு அனுப்பியது.
அப்படி அவர் தன் உயிரை காட்டுக்கு அனுப்பிவிட்டு நடைபிணமாக வாழ்ந்த வாழ்க்கைதான் ராமாயணத்திற்கே காவிய அந்தஸ்த்தை வழங்குகிறது.
ராமர் லக்ஷ்மணரிடம் அன்னையை காட்டுக்கு அழைத்து சென்று விட்டுவிடும் படி கூறுகிறார். அன்னை ராமரிடம் சொன்னால் வனத்திற்கு செல்ல மனம் வராது என்பதால் சொல்லாமலேயே கிளம்புகிறாள். (இரண்டொரு நாளில் வந்துவிடுவோம் என்ற எண்ணம் அவளுக்கு) அப்பொழுது ராமர் தன் அறையில் கண்களில் நீர் வழிய அமர்ந்திருக்கிறார். அதன் பிறகு அது பற்றி ராமர் யாரிடமும் பேசுவதில்லை. அவர் தானும் காட்டுக்குப் போகப்போவதாக சொல்லியிருந்தால் மீண்டும் தம்பிகள் மூவரும் நாங்களும் வருகிறோம் என்பார்கள். மக்களில் பாதி பேர் பின்னாலேயே வருவார்கள். அவர் வேறு என்ன தான் செய்திருக்க முடியும்?
ஒரு பக்கம் தன் காதல் மனைவியை காட்டிற்கு அனுப்பிவிடுகிறார். மறுபக்கம் அன்னையின் பொற்சிலையை தன் அறையில் வைத்துக் கொள்கிறார். தேவதாசைப் போல சோகத்தில் குடித்து சீரழியவும் இல்லை. மாறாக எல்லா சோகத்தையும் தனக்குள்ளேயே புதைத்துவிட்டு மக்களுக்கான தன் கடமையை சிறப்பாக செய்கிறார். அவர் நினைத்திருந்தால் எத்தனை பெண்களோடு வேண்டுமானாலும் கூடிக் களித்திருக்கலாம். ஆனால் அவர் அன்னையைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதாலும் தொடவில்லை. அலுவல்கள் முடித்தவுடன் தனிமையில் அன்னையின் சிலை அருகில் வந்து அமர்ந்துவிடுவார். தன் சோகத்தைக் லக்ஷ்மணரிடம் கூட அவர் சொல்லவில்லை. சொன்னால் அன்னையை கூட்டிவர வேண்டும் என லக்ஷ்மணர் கிளம்பக் கூடும்.
என் ராமர் எப்படி வாழ்ந்திருக்கிறார் பாருங்கள்.
மனதுக்குள் ஒரு மென்மையான சோகம். அதை வெளிப்படுத்த முடியாத கடமையுணர்ச்சி. அன்னையின் மீதான காதலும் பிரிவின் ஏக்கமும் ஒரு புறம் இதயத்தை துளைக்க மக்கள் நலனுக்காக மட்டுமே செயல் பட்ட அந்த பரந்த மனம்.
"சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்" என்று எழுதினேன்.
ராமரை குற்றம் சொல்வது நிறைய பேருக்கு ரொம்ப எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் ராமர் அளவுக்கு நல்லவர்களும் இல்லை, புத்திசாலிகளும் இல்லை. அப்புறம் எங்கிருந்து ராமரை புரிந்து கொள்வது?
அதிவேகமாக சுற்றும் ஒரு பம்பரம் நிற்பது போல தெரியும். ராமரின் நற்பண்பும் அத்தகையது தான்.
அதிசுத்தமான கண்ணாடி தான் இருப்பதையே காட்டிக் கொள்ளாது.ராமரின் நல்ல மனம் அப்படிப்பட்டது தான்.
இதையெல்லாம் உணர்ந்த பிறகு எனக்கு ராமரை முன்பைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக பிடித்துப் போனது. என் அகம்பாவத்தை ஒருவர் முன்னால் விட்டுக் கொடுக்க முடியும் என்றால் அது ராமர் முன் மட்டும் தான். நான் சிரம் தாழ்த்தித் தொழ ஒரு தெய்வத்திற்கு தகுதியுண்டென்றால் அது ராமர் மட்டும் தான்.