அனைத்து நற்குணங்களும் நலமே குடிகொள்ள
உறுதியும் வலிமையும் மலையென நிலைபெற
தர்மம் இதுவென அறிவும் தெளிவுற
நன்றியை மறவா மனமது மிளிர்ந்திட
சத்தியம் நாவினில் நித்தியம் குடிகொள்ள
எடுத்த விரதத்தில் உடும்பென பிடிகொள்ள
நடத்தையில் தர்மமும் அணியென விளங்கிட
அனைத்து உயிருக்கும் கருணையை பொழிந்திட
கல்வியில் இன்னொரு கடலென திகழ்ந்திட
செய்யும் செயல்களில் நுட்பம் சிறந்திட
கண்டவர் கண்ணுக்கு அமிழ்தென தோன்றிட
தன்னம்பிக்கை தனது உள்ளத்தை ஊக்கிட
கோபத்தை அன்பும் அறிவும் அடக்கிட
மனமதன் மகிழ்வால் தோற்றமும் பொலிவுற
பொறாமை என்பது இல்லாது குறைசெய்ய
வெகுளும் பொழுதினில் தேவரும் மிரண்டிட
விளங்கிய மன்னன் ஶ்ரீராமர்
வினைகளை அகற்றும் பலராமர்
எதிலும் வென்றிடும் ஜெயராமர்
இதயத்தில் நின்றிடும் குணராமர்
வருக வருக வந்தெம்மைக் காக்க
வருக வருக வந்துளம் ஊக்க
வருக வருக இதயத்தில் நிற்க
நின்று நன்று பண்பதை காக்க
நன்மை நாயகன் நன்மைக் காவலன்
நன்மை நல்லுரு கொண்டதாய் திகழ்வோன்
நன்மை என்னில் நிலைபெற்று நிற்க
தீமை தீயால் சுட்டதாய் அலறிட
பொய்யது உரைக்கும் புத்தியை கரைத்திட
பிறன்மனை விரும்பும் இச்சையை எரித்திட
வரட்டு கெளரவம் வரண்டு காய்ந்திட
ஆணவம் ஆவென்று அலறி அடங்கிட
கோபம் அறிவெனும் அணைக்குள் அடங்கிட
முரட்டுத் தனமது வீரமாய் மாறிட
அவசரம் என்பது அகமதை அகன்றிட
புலன்கள் ஐந்தும் திரிவதை நிறுத்திட
கஞ்சத் தனமது கடுகென சுருங்கிட
வள்ளல் குணமதோ வானாய் வளர்ந்திட
உடலின் இச்சை காதலால் கனிந்திட
உள்ள மென்பது கோவிலாய் மாறிட
பிடிவாதம் என்பது தீமையில் தளர்ந்திட
பிடிவாதம் அதுவே நன்மையில் இறுகிட
எவர் சொல்லுக்கும் செவியும்-மனமும் திறந்திட
நன்மைகள் இருப்பின் நன்றியோ டேற்றிட
அன்பெனும் நீரது வெறுப்பை கரைத்திட
அறிவெனும் ஒளியது சோகத்தை விரட்டிட
அஞ்ஞானம் என்பது அகன்று தொலைந்திட
ஞானம் உள்ளத்தில் கனியென கனிந்திட
நானென்னும் எண்ணம் நன்றே கரைந்திட
நானற்ற தன்மை செயலில் மிளிர்ந்திட
சுயநலம் என்பது புத்தியை அகன்றிட
பொதுநலம் என்பதை பொன்னாய் எண்ணிட
எவரையும் எமது உறவாய் நினைத்திட
கருணை என்பது கடலாய் பெருகிட
மனிதர்கள் இடையே புரிதல் கூடிட
இணக்கம் மலர்ந்து பிணக்கம் அகன்றிட
குறைசொல்லும் புத்தியும் குறைந்து கரைந்திட
புறம்பேசும் புத்தியும் இல்லாது ஒழிந்திட
எவர்பற்றியும் தவறாய் நினைப்பதை நிறுத்திட
எவருள்ளும் உள்ள நன்மையைக் கண்டிட
பிறர்தோல்வியில் மகிழும் எண்ணம் ஒழிந்திட
பிறர்வலியை தனது வலியாய் கருதிட
எவரும் என்றும் வாழவே விரும்பிட
உதவிகள் செய்வதில் மகிழ்ச்சி கண்டிட
ஆசையின்றி இவ்வுலகை கண்களும் கண்டிட
கவனமாய் விழிப்புடன் காதுகள் கேட்டிட
சுவையை நாடாது நாவும் நயம்பட
சுறுசுறுப்பும் உடலில் சுகமாய் குடிகொள்ள
பயன்கருதி பழகும் குணமதும் குன்றிட
பயனில்லை எனினும் உதவிட விரும்பிட
புண்ணியம் அதனில் நம்பிக்கை பிறந்திட
பாவம் புரிவதில் பயமது தோன்றிட
நல்ல பாதையில் நாளும் சென்றிட
தீபாதை அகன்று தூரவே விலகிட
நல்லோர் நட்பு நாளும் வாய்த்திட
தீயோர் எங்கோ தொலைவில் வாழ்ந்திட
உழைப்பை மகிழ்ந்து விளையாட்டாய் செய்திட
உற்சாகம் என்பது புத்தியில் நிலைத்திட
நாளை பற்றிய கவலைகள் அற்றிட
ஒவ்வொரு கணமும் புதிதாய் திகழ்ந்திட
முன் தீர்மானங்கள் சுமக்காத மனமும்
வன்மத்தை இதயத்தில் சேர்க்காத குணமும்
கடந்ததை கடந்ததாய் கடக்கின்ற மனமும்
தவறெனில் தவறென ஏற்கின்ற குணமும்
இயல்பென இதயத்தில் ரத்தத்தில் கலந்திட
அதனால் மனமது துயரற்று மகிழ்ந்திட
எதிர்காலம் பற்றிய ஏக்கங்கள் அற்றிட
கடந்தகாலம் பற்றிய கவலைகள் நீங்கிட
நியாயம் என்பதை தளராமல் பிடித்திட
நியாயத்தின் பக்கத்தில் கவனமாய் நின்றிட
அநியாயம் செய்வோரை எதிர்த்திட துணிந்திட
எதிர்த்திடும் போதிலும் வெறுக்கா திருந்திட
பந்தத்தால் பிணைபடா தெள்ளிய புத்தியும்
ஆசையில் அகப்படா அழகிய மனமும்
புலனிச்சையால் சிதைவுறா வலிவுடை உடலும்
சொத்தென்ற உண்மை நெஞ்சில் நிலைபெற
ஒழுக்கப் பாதையில் செல்வதை விரும்பிட
சறுக்கல்கள் அனைத்தையும் சடுதியாய் நிறுத்திட
மனதில் வாக்கில் செயலில் தூய்மை
தாயினும் நன்மை புரிவதை தேர்ந்திட
என்றும் இறையை மறவா மனமும்
எப்பொழுதும் இறையை துதிக்கும் குணமும்
பிறர் ஏச்சுக்கு பேச்சுக்கு கலங்கா மனமும்
மனசாட்சியை இறையை நோக்கும் குணமும்
கொள்கையாய் கொண்டு தவமாய் வாழ்ந்திட
சமுதாயத்தில் தாமரை நீரென வாழ்ந்திட
ஆக்கம் அளித்திடும் செயல்களை செய்திட
வெட்டிச் சொற்களை சொல்வதை விட்டிட
சீராமரின் கொள்கையை துணையாய் கொண்டிட
சாத்தான் சூழ்ச்சியை நன்மையால் வென்றிட
நன்மை என்பதன் உருவாய் மாறிட
நாளைக்கு பற்பல புண்ணியம் சேர்த்திட
திறமைகள் வளர்த்திட வித்தைகள் கற்றிட
பயிற்சிகள் செய்திட முயற்சிகள் செய்திட
போட்டி என்பதை தன்னோடு வைத்திட
போட்டி பொறாமை பிறரிடம் ஒழித்திட
தோல்வியை வெற்றியை சமமாய் கருதிட
இரண்டிலும் புதிதாய் பாடங்கள் கற்றிட
தோல்வியின் பொழுதும் ஊக்கம் கொண்டிட
வெற்றியால் மனமது ஆடாமல் நின்றிட
சைவம் உடலுக்கு என்பதை தேரிட
வைணவம் மனதுக்கு என்பதை தேரிட
எவரும் வேற்றவர் இலையென் றுணர்ந்திட
பைபிளில் குரானில் ஞானம் கண்டிட
புத்தரைக் கற்று மனத்துயர் அற்றிட
அனுமனை துதித்து உடற்துயர் அற்றிட
ராம நாமமோதி நன்மையில் மூழ்கிட
நன்மையின் உருவாய் ராமர் போல் ஆகிட
சத்திய ராமர் சீதையின் ராமர்
லட்சிய ராமர் லக்ஷ்மண ராமர்
பண்பணி ராமர் பரதரின் ராமர்
சாத்விக ராமர் சத்ருக்ன ராமர்
அன்புடை ராமர் அனுமனின் ராமர்
சத்மார்க்க ராமர் சபரியின் ராமர்
குணமுடை ராமர் கெளசல்யா ராமர்
தயாள ராமர் தசரத ராமர்
குறையற்ற ராமர் குகனின் ராமர்
அழகிய ராமர் அங்கத ராமர்
சுகந்தரு ராமர் சுக்ரீவ ராமர்
சந்தோஷ ராமர் ஜாம்பவ ராமர்
விருப்ப ராமர் விபீஷண ராமர்
வடிவுடை ராமர் வாலியின் ராமர்
கனிவுடை ராமர் கைகேயி ராமர்
பணிவுடை ராமர் சுமித்ரா ராமர்
அருளுடை ராமர் அனந்தனின் ராமர்
அறிவுடை ராமர் வஷிஷ்ட ராமர்
வென்றிடும் ராமர் விஸ்வாமித்ர ராமர்
வரலாற்று நாயகன் வால்மீகி ராமர்
அழுக்கறு ராமர் அகல்யா ராமர்
அழகுரு ராமர் அனுசுயா ராமர்
பாசமிகு ராமர் பரத்வாஜ ராமர்
சுத்தமன ராமர் சுமந்த்ர ராமர்
சுபீட்ச ராமர் சுதீட்சண ராமர்
நலந்தரு ராமர் நல்லவர் ராமர்
வரந்தரு ராமர் பக்தரின் ராமர்
பரபிரம்ம ராமர் தவசியர் ராமர்
சூரிய ராமர் பகலின் ராமர்
சந்திர ராமர் இரவின் ராமர்
குளிர்ந்த ராமர் நீரின் ராமர்
வெம்மை ராமர் நெருப்பின் ராமர்
ஈர ராமர் தாவர ராமர்
வீர ராமர் வீரரின் ராமர்
உயிரான ராமர் உயிர்களின் ராமர்
மனசாட்சி ராமர் மனிதருள் ராமர்
சிம்ம ராமர் வனத்தின் ராமர்
கருட ராமர் வானின் ராமர்
அரசமர ராமர் மரங்களின் ராமர்
மகரமீன் ராமர் கடலின் ராமர்
பிராண ராமர் உயிர்சக்தி ராமர்
பிரணவ ராமர் மந்திர ராமர்
நெல்லிக்கனி ராமர் கனிகளின் ராமர்
தாமரை ராமர் மலர்களின் ராமர்
அழைப்பை ஏற்று வரவேண்டும்
ஆனந்தத்தை தர வேண்டும்
அன்பைப் பண்பை தர வேண்டும்
நல்லவன் ஆகிட வரம் வேண்டும்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம்ராம்
2 comments:
அருமை அருமை
நன்றி. :)
Post a Comment