திருமலேசா வேங்கடேசா சீனிவாசா கோவிந்தா
உந்தன் பாதம் சென்னி வைத்து போற்றினேன் நான் மாதவா
உந்தன் பாதம் கங்கை தோன்றி பாய்ந்த பாதம் அல்லவா
பாவம் போக்கும் பாதனே நான் உந்தன் புகழ் சொல்லவா
சேசமலை நீலமலை கருடமலை ஏறினேன்
அஞ்சனமலை ரிசபமலை நாரணமலை தாண்டினேன்
வேங்கடமலை ஏறிவந்து உந்தன் புகழ் பாடினேன்
ஞானம் நல்கும் பாதனே நான் உந்தன் அருள் நாடினேன்
மீனதாகி நீந்தி சென்று வேதநான்கும் மீட்டவா
உந்தன் பாதம் பற்றினேன் என் வாழ்வில் வளம் கூட்டவா
ஆமையாகி ஆழ்கடலுள் துயின்று மலைதூக்கினாய்
மோகினியாய் மாயம் செய்து தேவர் குறைபோக்கினாய்
கேழலாகி பூமிதன்னை கொம்பதனால் தூக்கினாய்
சிம்மமுகம் கொண்டுறுமி இரணியனை தாக்கினாய்
வாமனனாய் மாவலி முன் மூவடிமண் கோரினாய்
விக்ரமனாய் வளர்ந்தெழுந்து விண்விசும்பை மீறீனாய்
பரசு பற்றி கோபத்தோடு வன்மம் தீர்த்த நீயன்றோ
அரசு ராமன் ஆன போது மக்களுக்கு தாயன்றோ
ஏக இல் ஏகசொல் என்று வாழ்ந்த நன்னனே
மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் மன்னவர்க்கும் மன்னனே
பிறப்பெடுத்த அக்கணம் சிறைக்கடந்த செல்வனே
பாலுறிஞ்சி உயிர்குடித்த பிஞ்சிலேயே வல்லனே
உரலுருட்டி உதைத்த மரம் உனைதுதித்த மாயமே
காயாம்பூவின் வண்ணமாகும் மாயனே உன் காயமே
திருமகளை மீண்டும் மீட்க மண்ணகத்தே வந்தவா
திருமணத்தின் கடனை தீர்க்க வட்டிபல தந்தவா
குபேரனிடம் சிறைப்பட்ட செல்வம் மீட்ட செல்வனே
மனிதரிடம் செல்வம் மீண்டும் செழிக்க செய்த வல்லனே
குதிரைமுகம் கொண்டு நீயும் கல்வி ஞானம் ஊட்டுவாய்
உன் பாதம் பற்றும் அன்பர்களின் அறிவை அன்பை கூட்டுவாய்
ராமானுச முனிவனாகி சீர்திருத்தம் செய்தவா
ஆழ்வார்கள் அருந்தமிழில் ஆனந்தமாய் ஆழ்பவா
எப்போதும் நின்ற போதும் சோர்வதன்றி நிற்பவா
வெற்பெடுத்து முன்னம் நின்ற தேவதேவனல்லவா
மணமகனாய் கோலம் கொண்டு மகிழ்ந்து நிற்கும் அண்ணலே
உன்னை காண வருபவர்க்கு வாரி தரும் வள்ளலே
வேங்கடேசா சீனிவாசா உந்தன் பாதம் பற்றினேன்
மங்கை மார்பா திருமலேசா உந்தன் புகழ் பாடினேன்
வேங்கடேச புகழ்மாலை மனனம் செய்வார் ஓதுவார்
மண்ணகத்தே மின்னும் புகழ் பெற்று நலம் வாழுவார்
0 comments:
Post a Comment