ராமபாதம் ராமபாதம் ராம ராமராம பாதமே
மதித்திடத் துதித்திடத் தீவினைகள் தீர்க்குமே
போற்றபோற்ற போற்றபோற்ற புண்ணியங்கள் சேருமே
பாவம்போக்கும் கங்கைதந்த ராம ராமராமபாதமே (1)
வாழ்க்கையது ஆறடா ஞானமது கடலடா
அனுபவமே ஈரமாம் ஊறுவது யோகமாம்
அத்தனைக்கும் ஊற்றான ராம ராமராமபாதமே
நன்மைசெய்து ஞானம்தத்தும் ராம ராமராமபாதமே (2)
அனுமன்தொட்ட பாதமே அன்புசொட்டும் பாதமே
சீதைதொட்ட பாதமே சிறந்துநிற்கும் பாதமே
பரதர்தொட்ட பாதமே பண்பளிக்கும் பாதமே
பாவமதைப் பொடித்தொழிக்கும் ராம ராமராமபாதமே (3)
ராமானுஜர் லச்சுமணர் தலையில்வைத்து போற்றினார்
ராமானுஜர் பரதாழ்வார் தண்டனிட்டுப் போற்றினார்
ராமானுஜர் சத்ருக்கனார் சிரசில்வைத்து போற்றினார்
ராம ராமரைத்தாங்கிநிற்கும் ராம ராமராமபாதமே (4)
நம்மாழ்வார் அணைப்பினில் மகிழ்ந்திருக்கும் பாதமே
நம்மாழ்வார் தம் மொழியில் பாடி வைத்த பாதமே
நன்மையதை தந்திடும் ஞானமதை தந்திடும்
நம்பியோரைக் கைவிடாத ராம ராமராமபாதமே (5)
கௌசல்யை மடியினில் நிற்கக் கற்ற பாதமே
தயரதர்தன் மார்பினில் நடக்கக் கற்ற பாதமே
கைகேசி சுமித்திரை கொஞ்சிய நல்பாதமே
கயமையதை கலங்கடிக்கும் ராம ராமராமபாதமே (6)
அகலிகைக்கு மீண்டுமொரு வாழ்வளித்த பாதமே
அவலமதை அலதாக்கும் அற்புதநற் பாதமே
அஞ்ஞானம் அலதாக்கும் அந் ஞானம் நமதாக்கும்
அறியாமை அதைபோக்கும் ராம ராமராமபாதமே (7)
உயர்பாதுகையை எளிதாக துறந்து நின்ற பாதமே
மரக் குறடுகளை மனமகிழ்ந்து ஏற்று நின்ற பாதமே
அதைக்கூட பரதருக்கு தானம் தந்த பாதமே
அன்பதுவின் ஊற்றான ராம ராமராமபாதமே (8)
நீலோத்பல மலராக விளங்குகின்ற பாதமே
கருநீல கருணைக் கடல் ராம ராமராமபாதமே
நீண்டதூர நடைக்கண்ட செம்புனிதப் பாதமே
நடந்துநடந்து பாரதத்தை புனிதம் செய்த பாதமே (9)
கங்கையில் காவிரியில் கால்நனைத்த பாதமே
களங்கமற்ற மன்னவரை தாங்குகின்ற பாதமே
குற்றமற்ற உள்ளங்களில் தங்குகின்ற பாதமே
குற்றமதை களைகின்ற ராம ராமராமபாதமே (10)
விராதனுக்கு விடியல்தந்த விடிவெள்ளி பாதமே
தீமையென்ற கிருமிக்கு சுடுகொள்ளி பாதமே
பாவத்தை அழிக்கின்ற பண்புள்ள பாதமே
புனிதத்தின் புனிதமான ராம ராமராமபாதமே (11)
கபந்தனின் மார்மீது ஏறிநின்ற பாதமே
கபந்தனின் கண்களை திறந்துவைத்த பாதமே
கபந்தனின் கட்டழகை மீட்டுத் தந்த பாதமே
கல்லைக் கூட பெண்ணாக்கும் ராம ராமராமபாதமே (12)
சபரியென்ற பக்தயை தேடிச் சென்ற பாதமே
சபரிதன் கண்ணீரால் பூஜித்த பாதமே
சப்தரிஷிகளும் தேவர்களும் போற்றிநிற்கும் பாதமே
சப்தலோகங்களை ஆளுகின்ற ராம ராமராம பாதமே (13)
பரத்துவாசர் குடிலினை அலங்கரித்த பாதமே
அர்க்கியங்கள் பாத்தியங்கள் ஏற்றுக் கொண்ட பாதமே
வான்மீகி முனிவரும் போற்றி நின்ற பாதமே
ராமகாதையின் நல்நாயகனின் ராம ராமராமபாதமே (14)
சுதீட்சணரும் அகத்தியரும் கண்டுமகிழ்ந்த பாதமே
ராமபிரான் தம்பிகள் மகிழ்ந்துகண்ட பாதமே
ஆஞ்சநேயர் தன் அன்னையைப் போல் நேசித்த பாதமே
பக்திக்கொண்டு பூசித்த ராம ராமராமபாதமே (15)
அனுமாரின் இதயத்தை இளகவைக்கும் பாதமே
அன்புடையோர் இதயத்தை உருகவைக்கும் பாதமே
ஞானத்தை மலர்போல மலரவைக்கும் பாதமே
நினைத்தாலே முக்திதரும் ராம ராமராம பாதமே (16)
சரணென்று வந்தவரைக் கைவிடாத பாதமே
சத்தியத்தை நிலைநாட்ட சக்தியுள்ள பாதமே
நித்தியமும் நினைத்து நெஞ்சில் நெகிழத்தக்க பாதமே
தீமைக்கு தீவைக்கும் ராம ராமராமபாதமே (17)
அத்ரியும் அனுசுயையும் அன்புசெய்த பாதமே
அடிபணிவோர்க்கு அன்னைபோல அன்புசெய்யும் பாதமே
உதைத்தாலும் உண்மையதை உணரவைக்கும் பாதமே
உத்தமரின் உண்மையரின் ராம ராமராமபாதமே (18)
லச்சுமணர் பாதைசெய்து பாதுகாத்த பாதமே
ஆஞ்சநேயர் பூசைசெய்து ஞானம்பெற்ற பாதமே
வீபீடணர் சிரசில்வைத்து அரசுபெற்ற பாதமே
பண்புதரும் தெய்வத்தின் ராம ராமராமபாதமே (19)
பரசுராமர் முறைத்துபார்த்து ஞானம்பெற்ற பாதமே
அரசுராமர் அன்புராமர் அவருடைய பாதமே
பக்திகொண்டு நினைப்போர்க்கு முக்திதரும் பாதமே
பரமளிக்கும் இகமளிக்கும் ராம ராமராம பாதமே (20)
வற்றாத செல்வத்தை வாரிவாரி தந்திடும்
வளமாக்கும் அன்பினை மாரிபோல பெய்திடும்
குணமாக்கும் மருந்தாகி உடல்மனதை ஆண்டிடும்
அமிழ்தினும் அற்புதமாம் ராம ராமராமபாதமே (21)
வாலியும் கண்டுவிட்டு வீடுபெற்ற பாதமே
சுக்ரீவன் கண்டுகொண்டு நாடுபெற்ற பாதமே
அனுமனும் அங்கதனும் பற்றிக்கொண்ட பாதமே
அன்பென்னும் அமுதூறும் ராம ராமராமபாதமே (22)
சீதையும் தியானித்து தீக்குளித்த பாதமே
அவ்வக்னி தேவனை அலறவைத்த பாதமே
சத்தியத்தை தாங்கிநின்ற நாயகனைத் தாங்கிநின்ற
சத்துவக் குணமளிக்கும் ராம ராமராமபாதமே (23)
புனிதமென்ற சொல்லுக்கு பொருளளிக்கும் பாதமே
பாவங்களைப் போக்கிவிட்டு பொருளளிக்கும் பாதமே
வாழ்க்கைக்கு வாழ்க்கைக்கு பொருளளிக்கும் பாதமே
வளமாக்கி வள்ளலாக்கும் ராம ராமராம பாதமே (24)
தியாகமென்ற சொல்லுக்கு பொருளான ராமரே
நன்மையென்ற ஒன்றதன் உருவான ராமரே
அன்புகொண்ட இதயத்தில் அருளாகும் ராமரே
அச் ஸ்ரீராமரைத் தாங்கி நிற்கும் ராம ராமராமபாதமே (25)
0 comments:
Post a Comment