ஆதிஷங்கரர் இயற்றிய "கனகதாரா ஸ்தோத்திரத்தை" தழுவியது.
மாயவர் மேனி மாமலையென வாய்த்திருக்கும்
பொன்னும் நவமணியும் பொன்வண்டென மொய்த்திருக்கும்
அரிமேனியில் அச்செல்வம் அனைத்தையும் வார்த்தாயே
அடியவன் வேண்டினேன் எனை அன்போடு பார் தாயே
அதிர்ஷ்டம் அகிலம் அனைத்திற்கும் நீ அன்னை
மங்கள மஹாலக்ஷ்மி கடைக்கண்ணால் கண்டிடுவாய் என்னை
கானக மலர்களில் கருவண்டு அமர்ந்திடும்
கற்கண்டு தேனமுதை சுவைத்து மகிழ்ந்திடும்
விலகி பறந்திடும் பின் மீண்டும் அமர்ந்திடும்
அரிமேனியை ரசித்திடுவாய் காமனின் பாணத்தால்
பின் கண்களை மூடிடுவாய் பெண்மையின் நாணத்தால்
உன் கரு விழியும் கருவண்டும் ஒன்றே தான் சிந்தித்தால்
மலர்ந்த முகத்தினளே அடியவனை நோக்குவாய்
பாற்கடலில் உதித்தவளே வறுமையை போக்குவாய்
அன்னை ஆனவளே எனை செல்வந்தன் ஆக்குவாய்
முரணழித்த மன்னவர் போல் எனை செல்வத்தால் ஊக்குவாய்
இந்திரலோக இன்பங்கள் அவர் அடியவர்க்கென வாழ்த்தினாய்
ஹரி பக்தரில் சிறந்தோரை ராஜயோகத்தால் ஏற்றினாய்
மதுசூதனன் மார்பினில் மகிழ்ச்சியாய் வசித்தாயே
மூர்த்தியின் கீர்த்திகளை கண்களால் புசித்தாயே
அரியமால் அணைப்பினில் உள்ளம் களித்தாயே
ஆண்டவன் அவனுக்கே செல்வங்கள் அளித்தாயே
நாயகனின் வார்த்தைகளை ரசித்து சிரித்தாயே
ஏழை நான் வேண்டினேன் ஏற்றம் தா தாயே
சக்தியாய் விளங்கும் மலைமகள் நீ தான்
சரஸ்வதி ரூபத்தில் கலைமகள் நீ தான்
விஷ்ணுவின் மார்பில் அலைமகள் நீ தான்
பார்க்கவ மகரிஷியின் தவமகள் நீ தான்
சர்வலோகம் காப்பது உன் கற்பு தீ தான்
செல்வி நீ அன்பு செய்தால் செல்வந்தன் நான் தான்
செந்தாமரை மலர்களில் தூயவளே வசித்தாய்
வெண்தாமரை கண்களால் மாயவனை ரசித்தாய்
வெள்ளை நிற யானைகளில் செய்கின்றாய் பவனி
அன்பென்ற ஆயுதத்தால் ஆள்கின்றாய் தரணி
நீலவண்ணன் நெஞ்சத்தில் நீ இதயக்கனி
நீ பார்த்தால் பொசுங்கிவிடும் என் வினையின் பிணி
மாதவத்தால் பார்க்கவர் பெற்றெடுத்தார் உன்னை
மாதே நீ மனம் மயக்கும் மன்மதனின் அன்னை
விஷ்ணு விரும்பியே வைத்திருக்கிறார் உன் மீதான பித்தை
அழகில் கூட நீ ரதி தேவியின் அத்தை
பெண்கள் எல்லோரும் வேண்டினர் உன் போன்ற மருமகள்
தனம் கல்வி வீரம் தர நீ தானே திருமகள்
திருமகளே உன் கண்கள் கருணையுள்ள மேகம்
நீ மனது வைத்தால் தீர்ந்துவிடும் வறுமையெனும் தாகம்
நிலவும் அமுதும் உன்னோடு வந்தன
மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் மகிழ்ச்சியை தந்தன
வானவர் வணங்கிடும் நீ வேதத்தின் வடிவம்
இறைவி நீ இறங்கினால் என் ஏழ்மை நிலை விடியும்
தங்கத் தாமரை மேல் வீற்றிருக்கும் தேவியே
சார்ங்கம் தாங்குகின்ற தலைவனின் ஆவியே
பிருகு மகரிஷியின் முத்தான புதல்வியே
வானத்து தேவரெல்லாம் வணங்குகின்ற முதல்வியே
தாமரைக் கண்களால் அருள்புரியும் அன்னையே
கருணை மிகு விழிகளால் கண்டிடுவாய் என்னையே
தாமரை மலர்களை கரத்தில் ஏந்தினாய்
தாமோதரன் அன்பிற்கு மனத்தில் ஏங்கினாய்
விண்ணவரின் மண்ணவரின் உள்ளத்தை அறிந்தாய்
விண்ணுக்கும் மண்ணுக்கும் செல்வத்தை சொரிந்தாய்
வண்ணப் பட்டாடை மலர் மாலைகள் தரித்தாய்
உழைப்பவர் இல்லத்தை செல்வத்தால் நிறைத்தாய்
ஒளி ரூப வடிவோடு உலவுகின்ற பெண்ணே
ஒப்பில்லா மாலவரின் கண்ணான கண்ணே
மூவுலகம் முழுவதும் நீயே ஆக்கினாய்
அயராது துதித்தோரின் வறுமை போக்கினாய்
உனை ஆகாயகங்கையால் திசை யானை அர்ச்சிக்கும்
தன் தலைவி வாழ்கவென திசையெங்கும் கர்ஜிக்கும்
தேவீ உன் திருவிழிகள் என் திசையை நோக்கட்டும்
தீராத தீவினைகள் தகர்த்துப் போக்கட்டும்
உலகின் எல்லைகளை நிர்ணயிக்கும் திசையெட்டும்
உன் பிள்ளை நான் என்ற நற்செய்தி பரவட்டும்
உன் பாதம் பணிந்தவன் மேல் உன் பார்வை பதியட்டும்
இந்த மஹாவிஷ்ணு பக்தனுக்கு மங்களங்கள் அருளட்டும்
5 comments:
Thanks a lot for this.The word 'thanks' is not enough to thank you for your good work.But my word bank is not enough.
This is honestly very helpful as I couldn't understand Kanagathara Sthothiram before.
Why don't you try 'Pancharathnams' like this? It would be helpful.
See..how selfish I am...
Niru, Thanks. I too don't know sanskrit. I got a book from Ramakrishna Math with explanation in Tamil for Kanakathara Sthothram. With that book I wrote it as a poem.
If I get Pancharathnams like that, I can try. I never heard of it till now.
Thank You..I am very surprised that you never heard about Pancha ratnams yet.
Here it is.Ganesha Pancha Ratnam.Actually Pancha Ratnams are awesome.
You can listen by this link.
You can get all other God's Pancha Ratnams via this.
http://www.youtube.com/watch?v=vUQFIFzrY4c&feature=related
You Can see lyrics here:
http://www.hindudevotionalblog.com/2008/07/ganesha-pancharatnam-stotram-lyrics.html
Niru, Thanks. I will listen to them. I will try to translate when I get time. Thanks.
Ganesh Pancharathnam is excellent. I am enjoying it. Thanks. :)
Post a Comment